கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்


கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:00 PM GMT (Updated: 21 Jun 2019 8:51 PM GMT)

கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

கூட்டத்திற்கு வந்த திரளான விவசாயிகள் கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும், காய்ந்த கரும்புகளுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகை வழங்க கோரியும் கையில் கரும்புகளை ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு விவசாயிகளின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்ததை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபால், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாண்டியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரதாப்ராவ், வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story