போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை


போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2019 5:45 AM IST (Updated: 23 Jun 2019 5:45 AM IST)
t-max-icont-min-icon

போரூர் அருகே 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி,

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல், தெள்ளியார் அகரம், தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 37). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களுக்கு பிரதீப் (4), சக்திவேல் (2) என 2 மகன்கள் இருந்தனர்.

இதில் மூத்த மகன் பிரதீப்புக்கு வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் இருந்து வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பிரதீப்புக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இளைய மகன் சக்திவேலும் பேச முடியாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2 மகன்களுக்கும் வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் போனதை கண்டு கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் தாயார் அஸ்வினி இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூத்தமகன் பிரதீப்பை மாங்காட்டில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு கணவருடன் அஸ்வினி அனுப்பி வைத்தார். மகேஷ் தனது மகனை அழைத்து சென்று அவரது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் மனைவி தூங்கி இருப்பார் என்று நினைத்து வீட்டு திண்ணையில் படுத்துக்கொண்டார்.

சிறிதுநேரம் கழித்து கதவை தட்டினார். அப்போதும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டிற்குள் அஸ்வினி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று அஸ்வினியை மீட்டார். ஆனால் அவர் இறந்து விட்டார்.

பின்னர் கட்டிலில் பார்த்தபோது அவரது இளைய மகன் சக்திவேலும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் சங்கர்நாராயணன் ஆகியோர் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

2 மகன்களும் காது மற்றும் வாய் பேச முடியாமல் இருந்ததால் மகனை கொன்று விட்டு அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவர் இளைய மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? அல்லது விஷம் கொடுத்து கொன்றாரா? என்பது பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியும் என்று விசாரணையில் தெரியவந்தது.

மேலும் திருமணமாகி 6½ ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வாய் பேச முடியாத மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story