ஆம்பூர் அருகே பொதுக்கூட்டத்தில் மோதல், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறியல் போலீஸ் நிலையம் முற்றுகை - அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டதாக புகார்


ஆம்பூர் அருகே பொதுக்கூட்டத்தில் மோதல், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறியல் போலீஸ் நிலையம் முற்றுகை - அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டதாக புகார்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 12:26 AM GMT)

ஆம்பூர் அருகே தி.மு.க.பொதுக்கூட்டத்தில் 2 கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பிரச்சினைக்கு காரணமான அ.தி.மு.க.வினரை கைது செய்யக்கோரி 2 எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர், 

ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது. இதனையொட்டி பேரணாம்பட்டு ஒன்றியம் வெங்கடசமுத்திரம் கிராமத்தில் தி.மு.க.சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் கருணாநிதி பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), காத்தவராயன் (குடியாத்தம்), மேற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் தலைமை கழக பேச்சாளர் உள்பட கட்சிபிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் அ.தி.மு.க. அரசை குறைக்கூறி பேசியதாக தெரிகிறது. இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அங்கு வந்தனர். அவர்கள் “இரவு 10 மணி ஆகிவிட்டது, இதனால் பொதுக்கூட்டத்தை நிறுத்த வேண்டும்” என கூறியதால் 2 கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சூழ்நிலை நிலவியது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் போலீசார் உடனடியாக கூட்டத்தை நிறுத்தும்படி கூறிவிட்டு அ.தி.மு.க.வினரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

அப்போது மேடையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அ.செ.வில்வநாதன், காத்தவராயன் மற்றும் கட்சியினர் “தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வேண்டும் என்றே தகராறில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்ய வேண்டும். அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம்” எனக் கூறி வெங்கடசமுத்திரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் செய்வதறியாமல் தவித்து, தி.மு.க.வினரை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் தி.மு.க.வினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆம்பூரில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலீஸ் நிலையத்தில் புகார் தாருங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் உமராபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் “பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்யாவிட்டால் தி.மு.க.சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. புகார் அளித்தார். இதே போல் தி.மு.க.வினர் மீதும் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இரு புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார் அதற்கு சி.எஸ்.ஆர். கொடுத்து கட்சியினரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story