காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
வண்டலூர்,
தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், கன்னிவாக்கம், காயரம்பேடு, பெருமாட்டுநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர், படாளம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலையில் பழமையான மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, ஆலப்பாக்கம், ஆப்பூர், செட்டி புண்ணியம், வாலாஜாபாத், காஞ்சீபுரம் பாலுச்செட்டிச்சத்திரம், மாமல்லபுரம், சோழிங்கநல்லூர், பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, காரப்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இதேபோல் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளாக மணவாளநகர், புட்லூர், செவ்வாப்பேட்டை, பெருமாள்பட்டு, வெள்ளவேடு, திருமழிசை, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, மப்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மீஞ்சூர், திருத்தணி, பழவேற்காடு, பொன்னேரி பகுதிகளில் லேசான மழை பெய்தது.