குத்தகை தொகையை செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம், கட்டுப்பாட்டு அறைக்கு சீல் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை


குத்தகை தொகையை செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம், கட்டுப்பாட்டு அறைக்கு சீல் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2019 11:00 PM GMT (Updated: 27 Jun 2019 7:44 PM GMT)

குத்தகை தொகையை செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம், கட்டுப்பாட்டு அறைக்கு சீல் வைத்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே சக்திமலையில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைப்பதற்காக 1½ ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை குத்தகைக்கு வழங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு சுமார் 33 சென்ட் பரப்பளவில் செல்போன் கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு வருவாய்த்துறைக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து செலுத்தவில்லை. இதன் காரணமாக தற்போது வரை குத்தகை தொகை மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 83 ஆயிரத்து 978 ரூபாய் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. குத்தகை தொகையை செலுத்த வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீசுகளை அனுப்பியும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து செல்போன் கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு சீல் வைத்து, நிலத்தை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் நேற்று மதியம் 2 மணிக்கு கோத்தகிரி தாசில்தார் சங்கீதாராணி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் சக்திமலையில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம், கட்டுப்பாட்டு அறைக்கு சீல் வைத்தனர். மேலும் குத்தகைக்கு வழங்கிய நிலத்தை மீட்டதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டது. இதற்கிடையில் மின் கட்டண பாக்கியையும் செலுத்தவில்லை என்பதால் செல்போன் கோபுரத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தையும் துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பாக்கியை செலுத்த கால அவகாசம் கேட்டு இருப்பதால், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

கடந்த 1993-ம் ஆண்டு வருவாய்த்துறை குத்தகைக்கு வழங்கிய நிலத்தின் அப்போதைய மதிப்பு ரூ.85 ஆயிரம். ஆனால் விதிக்கப்பட்ட குத்தகை தொகை ரூ.91 ஆயிரம். பலமுறை குத்தகை தொகையை குறைக்க விடுத்த கோரிக்கையை வருவாய்த்துறை ஏற்கவில்லை. தற்போது அங்குள்ள நவீனமயமாக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதனுடன் இணைக்கப்பட்டு ஜக்கனாரை, தப்பக்கம்பை, பர்ன்சைடு, மிளிதேன், குஞ்சப்பனை ஆகிய பகுதிகளில் செயல்படும் 5 பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்கள் மின்சார தடை ஏற்பட்டால் செயலிழந்து விடும். இதுமட்டுமின்றி அந்த 6 செல்போன் கோபுரங்களின் வான் பரப்பில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சைனல்கள் சென்று, வருவதும் பாதிக்கப்படும். இதனால் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்றுள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பாக்கி தொகையை செலுத்த மாவட்ட கலெக்டரிடம் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story