பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை ரெயில்வே இணைமந்திரி சுரேஷ் அங்கடி அறிவிப்பு


பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை ரெயில்வே இணைமந்திரி சுரேஷ் அங்கடி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 11:30 PM GMT (Updated: 29 Jun 2019 10:22 PM GMT)

நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே இணைமந்திரி சுரேஷ் அங்கடி அறிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எதிரில் சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு (பெங்களூரு சிட்டி) செல்வதற்கு 3-வது நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.65 கோடி செலவில் புதிதாக இந்த 3-வது நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டிக்கெட் கவுண்ட்டர்கள், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது.

இந்த புதிய நுழைவு வாயில் மற்றும் டிக்கெட் கவுண்ட்டர்களை மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:-

“மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலும், நானும் பதவி ஏற்றுக் கொண்ட போது 100 நாட்களில் ரெயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு எடுத்தோம். அதாவது ரெயிலில் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பது, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது அதில் முதன்மையானதாகும். எல்லா ரெயில்களும் குறித்த நேரத்திற்கு வந்து செல்ல வேண்டும், எக்காரணத்தை கொண்டும் ரெயில்கள் காலதாமதமாக வரக்கூடாது, அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது எங்களது முக்கிய குறிக்கோள் ஆகும்.

இதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாள் காலதாமதமாக கூட ரெயில்கள் வந்து சென்றுள்ளன. ரெயில்கள் காலதாமதமாக வருவதால் பயணிகள் ஏராளமான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு சரியான நேரத்தில் போக முடியாத நிலை ஏற்படும். ஆனால் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு ரெயில்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

நான் ரெயில்வே மந்திரியாக பதவி ஏற்ற பின்பு குளிர்சாதன வசதிகள் கொண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்வதில்லை. சாதாரண வகுப்பு பெட்டியில் மட்டுமே பயணம் செய்கிறேன். அதன் மூலம் அங்கிருக்கும் பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்து கொள்வேன். பயணிகள் கூறும் குறைகளை உடனடியாக தீர்க்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க கூடாது. பயணிகளுக்கு 5 நிமிடத்தில் டிக்கெட் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.

ஏனெனில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்து நிற்கும் போது, ரெயில் சென்று விடுமோ என்ற பயத்தில் நிற்க கூடாது. அதற்காக தான் 5 நிமிடத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும். நாட்டின் 4 திசை களையும் ரெயில்கள் மூலமாக இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முன்வந்துள்ளார். அந்த திட்டம் வெற்றி பெற்றால், நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்த பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும்.

ரெயில்வே துறை இன்னும் பல மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும். ஜப்பான், சீனாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் இன்னும் 100 கிலோ மீட்டர் வேகத்தை கூட தாண்டவில்லை. ரெயில்வே துறை வளர்ச்சி அடைய மத்திய அரசு மட்டும் முயன்றால், எதுவும் சாதிக்க முடியாது. மத்திய அரசுடன், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வுகாண பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள ரெயில் மேம்பாலங்களில் ரெயில்கள் செல்லும்போது கழிவுநீர் கீழே விழுவதாக மாநகராட்சி மேயர் கங்காம்பிகே தெரிவித்துள்ளார். ரெயில்களில் இருந்து கழிவுநீர் ரோட்டில் விழுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி பேசினார்.

விழாவில் பி.சி.மோகன் எம்.பி, மாநகராட்சி மேயர் கங்காம்பிகே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story