குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்ற 4 பெண்கள் கைது


குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்ற 4 பெண்கள் கைது
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

வறுமையில் வாடும் தம்பதிகளிடம் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளை வாங்க வந்த 2 பேரும் பிடிபட்டனர்.

மும்பை, 

வறுமையில் வாடும் தம்பதிகளிடம் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக பணம் கொடுத்து வாங்கி விற்பனை செய்து வந்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதில், குழந்தைகளை வாங்க வந்த 2 பேரும் போலீசில் சிக்கினர்.

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்தவர் அமர்விலாஸ். இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அவர் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்பினார்.

இந்தநிலையில் கல்யாணை சேர்ந்த ஆஷா என்ற பெண் குழந்தை இல்லாத தம்பதிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளை தத்துகொடுத்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆஷாவை தொடர்புகொண்டு அவர் பேசினார்.

இவரைபோல கல்யாணை சேர்ந்த பாக்யஸ்ரீ கதம் என்பவரும் ஆண் குழந்தையை தத்து எடுக்க ஆஷாவை தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, இருவரும் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் 2 ஆண் குழந்தையை தத்து எடுத்து தருவதாக ஆஷா தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆஷாவை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் ஆஷா 2 ஆண் குழந்தைகளை விற்க வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆஷாவை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். இதில், அவர் வறுமையில் இருந்து வரும் பெற்றோர்களிடம் பணத்தை கொடுத்து ஆண் குழந்தையை சட்டவிரோதமாக வாங்கி விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆஷாவை கைது செய்தனர். மேலும் ஆண் குழந்தைகளை வாங்க வந்த அமர்விலாஸ், பாக்யஸ்ரீ ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக ஆஷாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கல்யாணை சேர்ந்த சோனி(26), மான்கூர்டை சேர்ந்த சுனந்தா (30), சதாப்தி ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் சவிதா (30) ஆகிய 3 பெண்களுடன் சேர்ந்து ஆஷா குழந்தைகளை சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் ஏற்கனவே மேலும் 2 குழந்தைகளை விற்று இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story