எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து - போலீஸ் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி


எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து - போலீஸ் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 6 July 2019 4:15 AM IST (Updated: 6 July 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து போலீஸ் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி வகுப்பு தேனியில் நடந்தது.

தேனி,

தேனி மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றும், போலீஸ் வாகன டிரைவர்களுக்கு எரிபொருள் சிக்கனம் மற்றும் சாலை விதிகள் குறித்த பயிற்சி வகுப்பு தேனி ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கும் போது, விபத்தில்லா பயணம் சாத்தியமாகும். வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். வாகனத்தை இயக்கும் முன்பு வாகனத்தின் அனைத்து பாகங்களையும் தணிக்கை செய்து வாகனத்தை இயக்க வேண்டும்.

போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், போலீசார் சாலை விதிகளை பின்பற்றி பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். போலீசார் அனைவரும் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் பேசிக் கொண்டோ, மது அருந்திவிட்டோ வாகனம் ஓட்டக் ஓடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், இந்திய அரசின் பெட்ரோலிய துறை மற்றும் எரிபொருள் சிக்கன ஆராய்ச்சி குழுமத்தின் தெற்கு மண்டல பயிற்சியாளர் முகமது இக்பால் கலந்துகொண்டு எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சிக்கு முன்பாக எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Next Story