லாட்ஜில் நடந்த தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கல்லூரி மாணவி படுகொலை காதலன் கைது


லாட்ஜில் நடந்த தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கல்லூரி மாணவி படுகொலை காதலன் கைது
x
தினத்தந்தி 12 July 2019 12:00 AM GMT (Updated: 11 July 2019 7:03 PM GMT)

சென்னையில் லாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டது அம்பலமானது. தற்கொலை நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமேர்சிங் (வயது 23). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்தார்.

இவர், அதேபகுதியை சேர்ந்த காஜல் (19) என்ற கல்லூரி மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த ஜூன் 10-ந்தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மியான் சாகிப் தெருவில் உள்ள லாட்ஜ் அறை ஒன்றில் காஜல் இறந்து கிடந்தார். சுமேர்சிங் வாயில் நுரை தள்ளியநிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, லாட்ஜ் அறைக்கு சென்று விசாரித்தார். இறந்து கிடந்த கல்லூரி மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிருக்கு போராடிய சுமேர்சிங், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் தேறி வந்தார். போலீஸ் விசாரணையில் காஜலும், நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக குளிர்பானத்தில் ‘சயனைடு’ விஷம் கலந்து குடிக்க முடிவு செய்தோம்.

எங்களது திட்டப்படி காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடித்துவிட்டார். ஆனால் நான் லேசாக குடித்துவிட்டு பின்னர் துப்பிவிட்டேன். இருந்தாலும் சயனைடு விஷம் என்னை தாக்கிவிட்டது என்று சுமேர்சிங் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் போலீசார் முதல்கட்டமாக தற்கொலை வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்தநிலையில் கல்லூரி மாணவி காஜலின் மருத்துவ பரிசோதனை முடிவு இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. காஜல் குளிர்பானத்தில் கலந்து குடித்த சயனைடு விஷத்தால் சாகவில்லை என்றும், கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.

இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுமேர்சிங்கிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காதலி காஜலை கொலை செய்ததை சுமேர்சிங் ஒப்புகொண்டார். பின்னர் அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

காஜலும், நானும் 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். திருமண நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் சந்தித்தபோது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. காஜல் வசதி படைத்தவர். எங்கள் காதல் விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் காஜலின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

காஜல் பெண்கள் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார். எங்கள் காதல் விவகாரத்தால் அவரது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர்.

காஜலுக்கு உடனடியாக வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. காஜல் என்னோடு செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறினார். அப்படியானால் நாம் இருவரும் ஓடிச்சென்று எங்காவது பதிவு திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று தெரிவித்தேன்.

ஆனால் காஜல் அதை ஏற்கவில்லை. ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டால் எனது குடும்பத்திற்கு அவமானமாகிவிடும் என்று காஜல் மறுத்துவிட்டார்.

எங்காவது ஓடிச்சென்று போய் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று காஜல் தெரிவித்தார். தற்கொலை முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. உனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்து என்று காஜலிடம் கூறினேன்.

ஆனால் காஜல், உன்னை காதலித்துவிட்டு, இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு என்னால் வாழமுடியாது. இருவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்று என்னை வற்புறுத்தி வந்தார். இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் அறையில் தங்கினோம்.

தற்கொலை செய்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் ரூ.6 ஆயிரம் கட்டி சயனைடு விஷம் வாங்கினேன். தங்கத்தை உருக்குவதற்காக சயனைடு தேவைப்படுகிறது என்று பொய் சொல்லி சயனைடு விஷத்தை வாங்கினேன்.

குளிர்பானத்தில் சயனைடு விஷத்தை கலந்தேன். ஆனால் மனதளவில் எனக்கு தற்கொலை செய்துகொள்வதில் விருப்பம் இல்லை. முதலில் சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை காஜல் குடித்துவிட்டார். நான் குடிப்பதுபோல நாடகமாடிவிட்டு, சிறிதளவு குடித்துவிட்டு பின்னர் அதை வெளியில் துப்பிவிட்டேன்.

இதற்குள் காஜல் மயக்கமடைய தொடங்கினார். நீ ஏன் குடிக்கவில்லை? என்று அந்த அரைகுறை மயக்கத்திலும் என்னிடம் சண்டை போட்டார். இதற்குள் சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை வாந்தி எடுத்துவிட்டார்.

குளிர்பானத்தை வாந்தி எடுத்ததால் காஜல் உயிர்பிழைத்து கொள்வார் என்று நினைத்தேன். உயிர் பிழைத்தால் நமக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று பயந்தேன். இதனால் காஜல் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினேன். சற்று நேரத்தில் அவர் பிணமாகிவிட்டார்.

சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை நான் சிறிதளவு குடித்து, அதை துப்பிவிட்டாலும் அதன் விஷத்தன்மை என்னை தாக்கியது. நானும் மயக்கமடைந்து விட்டேன்.

இவ்வாறு சுமேர்சிங் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சுமேர்சிங் குணமாகி வீடு திரும்பினார்.

கொலை வழக்கில் அவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காஜலை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக முதலில் வாக்குமூலம் கொடுத்த சுமேர்சிங் பின்னர் மாற்றி கூறினார்.

காஜலை காப்பாற்றுவதற்காக நான் போராடியபோதுதான் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுவிட்டது என்று மறுத்து கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story