கொல்லிமலையில் ஆகஸ்டு 2, 3-ந் தேதி வல்வில் ஓரி விழா கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
கொல்லிமலையில் வருகிற ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்பட இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு வல்வில் ஓரி விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் அரசின் சார்பில் கொல்லிமலையில் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட உள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சியை சிறப்பாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு, பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமலதா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story