ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 9:11 PM GMT)

ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வலியுறுத்தி தஞ்சையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் முன்பு கும்பகோணம்-நாகை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பொதுச் செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகையன், அருள்தாஸ், அழகிரி, நவநீதன் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்றே ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து கழக நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 15 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடை தொகை, பி.எப். உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

3 ஆண்டுகளாக வழங்கப் படாமல் நிலுவையில் உள்ள உயர்ந்துவிட்ட பழைய அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு பணி நியமன ஆணை உடனே வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் இறப்பு நலநிதி திட்டங்களை போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை எல்லாம் நடைபெறும் சட்டசபை கூட்ட தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்து பேசினார்.

இதில் துணை தலைவர் துரை.மதிவாணன், கவுரவ தலைவர் சந்திரமோகன், துணைத் தலைவர் பீர்தம்பி, துணைச் செயலாளர் வெங்கடபிரசாத் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சேவையா, கோவிந்தராஜன், பொன்.தங்கவேல், சுந்தரபாண்டியன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடிவில் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story