திருவெறும்பூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதல்; முதியவர் பலி


திருவெறும்பூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதல்; முதியவர் பலி
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 6:54 PM GMT)

திருவெறும்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருவெறும்பூர்,

ஈரோடு மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 55). இவரும், அதே பகுதியை சேர்ந்த குலவிளக்கு கோவில் பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணனும்(65) நேற்று காலை தஞ்சையில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சக்திவேல் ஓட்டினார். அவர் அருகே கிருஷ்ணன் அமர்ந்திருந்தார். அந்த கார் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரை அடுத்த காட்டூர் மஞ்சத் திடல் பாலம் அருகே வந்தது.

அப்போது அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடை அருகே கறிக்கோழிகளை ஏற்றி வந்த லாரி சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு, அதில் இருந்து கோழிகளை இறக்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த லாரி மீது சக்திவேல் ஓட்டி வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்டது. இதில் கிருஷ்ணனும், சக்திவேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

முதியவர் சாவு

விபத்தை கண்ட பொதுமக்கள் அங்கு வந்து, காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து அவர்கள் திருவெறும்பூர் போலீசாருக்கும், திருச்சி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, லாரியின் அடியில் சிக்கிய காரை, கயிறு கட்டி இழுத்து பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

பின்னர் காரில் இருந்தவர்களை பார்த்தபோது, கிருஷ்ணன் இறந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்கு போராடிய சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

நீண்ட நேரம் வராத போலீசார்

இதற்கிடையே விபத்து குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திற்கு போலீசார் வரவில்லை. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை பொதுமக்களே சரி செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story