தஞ்சை பெரியகோவிலில் விநாயகர் சன்னதி கோபுரத்தை சுத்தப்படுத்த சாரம் அமைக்கும் பணி


தஞ்சை பெரியகோவிலில் விநாயகர் சன்னதி கோபுரத்தை சுத்தப்படுத்த சாரம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 17 July 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் விநாயகர் சன்னதி கோபுரத்தை சுத்தப்படுத்த சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிதிலம் அடைந்த சிற்பங்களை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலின் வளாகத்தில் கன்னி மூலையில் பெரிய விநாயகர் சிலை உள்ளது. இந்த சன்னதியின் வாசல்படியில் உள்ள மராட்டிய கல்வெட்டானது, இந்த பெரிய விநாயகர் சிலையை மராட்டிய மன்னன் சரபோஜி மகாராஜா பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறது. இந்த விநாயகர் சன்னதியின் மேல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சன்னதியை சுற்றிலும் நந்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவைகள் செங்கல், மண், சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டவையாகும். கோபுரத்தில் உள்ள விநாயகர் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் சிதிலம் அடைந்து உள்ளன. சன்னதிக்கு மேல் உள்ள விநாயகர் சிலையில் தும்பிக்கை இல்லாமல் காணப்படுகிறது. மேலும் நந்தி சிலைகள் தலையின்றி காணப்படுகிறது. கோபுரத்தில் பல இடங்களில் சிலைகள் விரைவில் சேதம் அடையும் நிலையில் உள்ளது. பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக கோபுரங்களை சுத்தப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

மராட்டா கோபுரம், கேரளாந்தகன், ராஜராஜன் கோபுரம் ஆகியவை சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெருவுடையார் சன்னதிக்கு மேல் கட்டப்பட்டுள்ள 216 அடி உயரம் கொண்ட கோபுரம் சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோபுரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இலகுவான ரசாயனம் மூலம் தூய்மைப் படுத்தப்பட்டு வருகிறது.

விநாயகர் சன்னதி கோபுரத்தை தூய்மைப்படுத்த இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணிக்கு முன்பாக விநாயகர் சன்னதி கோபுரத்தில் உள்ள சிற்பங்களை சீரமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிப்பதுடன் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோபுரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியுடன் சிதிலம் அடைந்த சிற்பங்களை சீரமைக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.

பெரியகோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் பல கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. சிவகங்கை பூங்கா மூடப்பட்டு இருப்பதால் காதல் ஜோடியினர் ஏராளமானோர் பெரியகோவிலுக்கு வருகின்றனர். அவர்கள் திருச்சுற்றுமாளிகை பகுதியில் அமர்ந்து கொண்டு, சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

Next Story