காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, துணை ராணுவ வீரரின் உடல் கூடலூரில் அடக்கம்


காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, துணை ராணுவ வீரரின் உடல் கூடலூரில் அடக்கம்
x
தினத்தந்தி 16 July 2019 10:30 PM GMT (Updated: 16 July 2019 11:35 PM GMT)

காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட துணை ராணுவ வீரரின் உடல் கூடலூர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் காசிம்வயலை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராம்குமார் (வயது 31). இவர் துணை ராணுவ படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந் தேதி காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ராம்குமார் இருந்தார். அப்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து கூடலூர் போலீசார், வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ராம்குமாருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் ராம்குமார் உடல் கோவை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மற்றொரு வாகனத்தில் கோவை துணை ராணுவ கமாண்டர் மூர்த்தி தலைமையிலான வீரர்கள் ராம்குமார் உடல் வைக்கப்பட்ட பெட்டியை கூடலூருக்கு நேற்று காலை 9 மணிக்கு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்போது ராம்குமாரின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து ஈமச்சடங்குக்கான நிதியை துணை ராணுவ படையினர் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து காளம்புழா மயானத்தில் துணை ராணுவ வீரர் ராம்குமார் உடல் அடக்கம் செய்யப் பட்டது.

Next Story