நங்கவள்ளியில் பயங்கரம்: ஜவுளிக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு


நங்கவள்ளியில் பயங்கரம்:  ஜவுளிக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 2:33 PM GMT)

நங்கவள்ளியில் ஜவுளிக்கடைக்குள் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிஓடிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே அவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப

மேச்சேரி, 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரியசோரகை தாசகாப்பட்டியை சேர்ந்தவர் ஜீவானந்தம். நங்கவள்ளி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளரான இவர் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவராகவும் இருந்தார். இவருடைய தம்பி வேலுதங்கமணி (வயது 34). இவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.

இவர் நங்கவள்ளி பஸ் நிலையம் அருகே ஜலகண்டாபுரம் சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது கடையில் கல்லாபெட்டியில் அமர்ந்திருந்தார்.

மேலும் கடையில் அவருடைய அக்காள் வசந்தி, கரட்டுப்பட்டி குட்டப்பட்டியான் தெருவை சேர்ந்த சரசு என்ற பெண் ஊழியரும் இருந்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இருவரும் தொப்பி அணிந்திருந்தனர். ஆளுக்கு ஒரு டி–சர்ட் எடுத்துக்கொண்ட அவர்கள், பின்னர் பணம் கொடுப்பதற்காக வேலுதங்கமணியிடம் வந்தனர்.

அப்போது அவர் ரசீது போடுவதற்காக குனிந்து எழுதிக்கொண்டு இருப்பதை பார்த்த அந்த இரு வாலிபர்களும் தங்கள் கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது தலையில் வெட்டினர். உடனே சுதாரித்து அவர் கைகளால் தடுக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் அவரின் கையிலும் சரமாரியாக வெட்டினர்.

இதனிடையே கடையில் இருந்த வசந்தியும், சரசுவும் அங்கிருந்து வெளியே வந்து கூச்சல் போட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த வேலுதங்கமணியை உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து நங்கவள்ளியில் பதற்றம் நிலவியதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இதனிடையே அந்த கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் அந்த வாலிபர்களில் ஒருவர் சம்மட்டியூரை சேர்ந்த முத்துச்சாமி மகன் சதீஷ்(28) என தெரியவந்தது. மற்றொரு வாலிபர் யார் என்று சரியாக அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து சதீஷின் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. உடனே அவர்களின் உறவினர்களிடம் அரிவாள் வெட்டுக்கான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று காலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அரிவாளால் வெட்டுப்பட்ட வேலுதங்கமணியின் அண்ணனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளருமான ஜீவானந்தம் தலைமையில் அந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நங்கவள்ளியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நங்கவள்ளி போலீசார் விரைந்து வந்து குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே ஜவுளிக்கடைக்குள் புகுந்து உரிமையாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து நங்கவள்ளியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story