குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா - விழுப்புரத்தில் பரபரப்பு
குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி தாலுகா முடியனூர் கிராமத்தில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் 4 குடிநீர் கிணறுகள் உள்ளன. இங்குள்ள மின்மோட்டார்கள் பழுதடைந்து இருப்பதால், கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீரை ஏற்றி கிராம மக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
மேலும் இங்கு குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், பல இடங்களில் அடைப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த முடியனூர் கிராம மக்கள் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு குடிநீர் வழங்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பொதுமக்களில் குறிப்பிட்ட சிலர், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, தங்கள் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story