தொடக்க விழா நடைபெற்று 6 மாதங்கள் ஆகியும் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணி தொடங்கப்படவில்லை - ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு


தொடக்க விழா நடைபெற்று 6 மாதங்கள் ஆகியும் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணி தொடங்கப்படவில்லை - ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 July 2019 11:15 PM GMT (Updated: 20 July 2019 7:29 PM GMT)

தொடக்க விழா நடைபெற்று 6 மாதங்கள் ஆகியும் அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணி தொடங்கப்படவில்லை என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டி உள்ளார்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் தெக்கலூரில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சுதர்சன் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கணேசன், பி.ராயப்பன், மாவட்ட பொருளாளர் நந்தகுமார், மாவட்டச் செயலாளர் ரவி சங்கர், தெக்கலூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசிய தாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு 6 மாதத்திற்கு மேல் ஆகிறது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும்போது 30 மாதங்களில் பணி நிறைவடையும் என்று அரசு அறிவித்தது. ஆனால் 6 மாதம் ஆகியும் திட்டத்திற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. இனியும் தாமதப்படுத்தாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். கோதாவரியும் காவிரியும் இணைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் பேசப்பட்டாலும் கூட அப்படி ஒரு திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. மத்தியில் இந்த ஆட்சி இருக்கும்வரை நதிகள் இணைக்கப்படும் என்ற கனவு நிறைவேற வாய்ப்பே கிடையாது.

தமிழகத்தில் பெய்யும் மழை நீரை குளம் குட்டைகளில் தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்துவதில் மூலமாகத்தான் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அந்த முயற்சிகளை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளை தூர்வாருவதற்கு தயாராக இருக்கின்றனர். அதை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் செயலைச் செய்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

குடிமராமத்து பணிகளுக்காக நிதி ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார்கள். அதில் எந்த குளம் தூர் வாரப்பட்டது. அந்த நிதி எப்படி செலவிடப்பட்டது என்பதை பற்றி சந்தேகம் பொதுமக்களிடத்தில் உள்ளது. அதை தீர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமையாக உள்ளது. இதுவரை பொது பராமரிப்பு பணிகளுக்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கியுள்ளது. எந்த குளம் குட்டைகள் தூர் வாரப்பட்டுள்ளது என மக்களுக்கு தெரியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவை தூர்வாரப்பட்டது என்பதை அந்த பகுதி மக்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

தமிழகத்தில் மின்தடை இல்லை என்கின்றனர். அப்படி இருந்தால் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு 15 ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். பிறகு ஏன் மின் இணைப்புகளை கொடுப்பதற்கு மின்வாரியம் தயங்குகிறது. மின்சாரம் அதிகம் இருக்கும் போது விவசாயிகள் கேட்கும் மின் இணைப்பை கொடுக்க வேண்டியதுதானே.

உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி முழுமையாக விவசாயிகளால் எதிர்க்கப்படுகிறது. புதைவிட கம்பிகளாக அந்த உயரழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே விவசாயிகள் வேறு வழி இல்லாமல் மத்திய அரசிடம் சென்று முறையிட டெல்லி சென்று போராட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழுமையாக ஆதரவு கொடுக்கிறது. அரசு விவசாயிகளை மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைக்காமல் அவர்களது உண்மையான பாதிப்பை புரிந்து கொண்டு சாலையோரங்களில் கம்பிகளை கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story