திருச்சியில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிப்பு கிடங்கு வசதி இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் தகவல்


திருச்சியில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிப்பு கிடங்கு வசதி இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 10:45 PM GMT (Updated: 20 July 2019 7:53 PM GMT)

திருச்சி கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெல்லையில் இன்டேன் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை விரைவில் திறக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் தென்மண்டல பொது மேலாளர் சிதம்பரம் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேன் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் தொழிற்சாலையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இதில் டேங்கர் லாரிகளில் வரும் கியாஸ்களை தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பக்கூடிய இடத்தில் 5-வது லைனில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததை போல ஒத்திகை நடந்தது. தொழிற்சாலை பணியாளர்கள் நவீன தொழில்நுட்ப கருவி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, கியாஸ் கசிவை தடுத்தனர்.

இந்த ஒத்திகையின்போது ஒருவர் மயங்கி விழுந்ததை போல தத்ரூபமாக நடித்தார். அவரை மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சென்றனர். இந்த ஒத்திகை தத்ரூபமாக நடந்ததால் உண்மையிலேயே தீ விபத்து ஏற்பட்டதை போன்ற நிலை இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இன்டேன் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 1 கோடியே 60 லட்சம் பேர் உள்ளனர். இந்த தொழிற்சாலையில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிக்கும் வகையில் கிடங்கு வசதி ரூ.10½ கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சேமிப்பு வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் ரூ.10 கோடி செலவில் 2.7 மெகாவாட் சூரிய மின் சக்தி தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

24 மணி நேரத்தில் இன்டேன் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. நெல்லையில் புதிதாக இன்டேன் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் வாரிய அனுமதி கிடைத்ததும் விரைவில் திறக்கப்படும். கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது கூடுதல் தொகை கேட்டால் புகார் தெரிவிக்கலாம். டெலிவரி கட்டணம் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் கூடுதல் தொகை கேட்டால் வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு அலுவலக பொது மேலாளர் ராஜேந்திரன், திருச்சி பிளான்ட் துணை பொது மேலாளர் பாலசுப்ர மணியன், திருச்சி மண்டல மேலாளர் பாபு நரேந்திரா, திருச்சி ஏரியா முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story