மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 2-வது நாளாக கடைகள் அடைப்பு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 2-வது நாளாக கடைகள் அடைப்பு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 6:53 PM GMT)

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி குத்தாலம் பகுதியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

கடந்த 1992-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாகை மாவட்டம் உருவானபோது, நாடாளுமன்ற தொகுதி அடிப்படையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மயிலாடுதுறை பகுதி மக்களிடம் எழுந்தது. அதன்பிறகு நாகைக்கு மிக அருகில் உள்ள திருவாரூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது மயிலாடுதுறை கோட்ட பகுதியில் தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மயிலாடுதுறையில் இருந்து மாவட்ட தலைநகரான நாகைக்கு செல்ல புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அல்லது திருவாரூர் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவதாக மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த தமிழக சட்டசபை கூட்ட தொடரில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 18-ந் தேதியில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள குத்தாலம்பகுதி வெறிச்சோடிகாணப்பட்டது. நேற்று குத்தாலம் பகுதியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் குத்தாலம் அஞ்சாறுவார்த்தலையில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட் டன. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தகர் சங்கர் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி சீர்காழியில் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன், மூத்த வக்கீல்கள் சுந்தரய்யா, கருணாநிதி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் புறக்கணிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழியில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story