தறிகெட்டு ஓடிய கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி ; 6 பேர் காயம்
நவிமும்பையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.
மும்பை,
நவிமும்பை, காமோதே செக்டார் 6 பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. திடீரென அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, ரோட்டில் சென்று கொண்டு இருந்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது.
மேலும் கார் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த பள்ளி பஸ் மீது மோதி நின்றது. இதையடுத்து காரை ஓட்டிவந்தவர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
இந்தநிலையில் அந்த பகுதியில் இருந்தவர்கள் கார் மோதி காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், சார்தக் என்ற 7 வயது சிறுவன், வைபவ் கவுரவ்(32) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிறுவனின் தாய் சாதனா, சிபா (16), ஆதிஷ், ஷரதா மற்றும் 2 சிறுமிகள் என 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தறிகெட்டு ஓடிய கார் மோதி 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள், பள்ளி பஸ் சேதமடைந்தன.
இந்தநிலையில் விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் விபத்தில் பலியான சிறுவன் உள்பட 2 பேர் மீது தான் மோதியது. பின்னர் தறிகெட்டு அந்த வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. காரை ஓட்டிச்சென்றவர் காமோதே பகுதியை சேர்ந்தவர் தான், என்றார்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி சென்றவர் குடிபோதையில் இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய காரில் இருந்து மதுபாட்டில் மீட்கப்பட்டதாகவும், டிரைவர் தவிர பெண் ஒருவர் காரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story