மாவட்ட செய்திகள்

புதிய கல்வி கொள்கையில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமானது - தனியரசு எம்.எல்.ஏ. பேட்டி + "||" + New Education Policy Actor Surya's opinion is fair - thaniyarasu MLA

புதிய கல்வி கொள்கையில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமானது - தனியரசு எம்.எல்.ஏ. பேட்டி

புதிய கல்வி கொள்கையில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமானது - தனியரசு எம்.எல்.ஏ. பேட்டி
புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கூறிய கருத்து நியாயமானது என்று ஈரோட்டில் தனியரசு எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு,

கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கேயம் தொகுதி தனியரசு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆற்றுநீர் பகிர்வு என்பது கடைமடை விவசாயிகள் வரை பயன்அடையும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் பவானிசாகர் அணையை கட்ட அடித்தளமாக விளங்கிய சுதந்திர போராட்ட வீரர் எம்.ஏ.ஈஸ்வரனுக்கு பவானிசாகர் அணை பூங்காவில் சிலை வைக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி அனுமதி பெற வழிவகை செய்வேன். தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கொடுக்கும் சலுகைகள் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.பி.க்களும், தி.மு.க. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையுடன் குரல் கொடுத்து உள்ளனர். தபால் தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டதால், பிராந்திய மொழிகளில் நடத்தக்கோரி தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு கூறினார்கள். இதற்கு மத்திய அரசு பணிந்து சமீபத்தில் நடந்து முடிந்த தபால் தேர்வை ரத்து செய்தது. அதுபோல் தமிழர்களின் உணர்வுகளை மீட்க அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கூறிய கருத்தில் நியாயம் இருக்கிறது. அரசியல் கட்சியினர் கூறுவதைவிட ஒரு நடிகர் கருத்து தெரிவிப்பது பெரிய விவாதமாக எடுத்து கொள்ளப்படுவதை உணர்கிறேன். இந்த கருத்து தெரிவித்ததை நான் வரவேற்கிறேன். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்று அவர் அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு தனியரசு எம்.எல்.ஏ. கூறினார்.