சட்டக்கல்லூரி மாணவியை தீ வைத்து எரித்த காதலன் கைது பாலத்தில் இருந்து குதித்தபோது கால் முறிந்தது


சட்டக்கல்லூரி மாணவியை தீ வைத்து எரித்த காதலன் கைது பாலத்தில் இருந்து குதித்தபோது கால் முறிந்தது
x
தினத்தந்தி 25 July 2019 4:45 AM IST (Updated: 25 July 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை தீ வைத்து எரித்த காதலனை போலீசார் கைது செய்தனர். அவரை பிடிக்க சென்றபோது பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிந்தது.

கே.கே.நகர்.,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர், திருச்சி சட்டக்கல்லூரியில் மாலைநேர வகுப்பில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து சக மாணவிகள் 3 பேருடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தவச்செல்வனும்(29) கடந்த 2011-ம் ஆண்டு முதல் நட்பாக பழகி வந்தனர். ஆனால் தவச்செல்வன் ரம்யாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் சென்னை தரமணியில் டிராவல்ஸ் வைத்துள்ளார்.

இந்தநிலையில் ரம்யா கடந்த 6 மாதமாக தவச்செல்வனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவ்வப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. ரம்யா வேறு யாருடனோ பழகி வருவதால் தான் தன்னை தவிர்த்து வருகிறார் என நினைத்த தவச்செல்வன் அவர் மீது ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று ஆத்திரத்துடன் ரம்யா தங்கி இருந்த அறைக்கு சென்று அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனே திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தவச்செல்வன் தப்பி சென்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரம்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய தவச்செல்வனை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருச்சி கே.கே.நகரை அடுத்த வடுகப்பட்டி பாலம் அருகே தவச்செல்வன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று பகல் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் தவச்செல்வன் தப்பி ஓடி அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையிலேயே வைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரம்யாவை தீ வைத்து எரித்த தவச்செல்வன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், “நானும், ரம்யாவும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2018 மார்ச் வரை 4 மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்று தங்கி இருந்தோம். ரம்யாவுக்கு செல்போன் வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் கடந்த 6 மாதங்களாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். நான் அவரை திருமணத்துக்கு வற்புறுத்தியபோது, மறுத்துவிட்டார். இதனால் அவர் யாருடனோ பழகி கொண்டு என்னை நிராகரித்து வந்தார். இது தொடர்பாக எங்களுக்குள் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் மீது ஆத்திரம் அடைந்தேன். சம்பவத்தன்று அதிகாலை எனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்து கொண்டு அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அங்கு அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றேன். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்“ என்று கூறி உள்ளார்.

Next Story