குடியை கெடுத்த குடி: மனைவி தற்கொலை செய்த விரக்தியில் தொழிலாளியும் சாவு


குடியை கெடுத்த குடி: மனைவி தற்கொலை செய்த விரக்தியில் தொழிலாளியும் சாவு
x
தினத்தந்தி 26 July 2019 12:02 AM GMT (Updated: 26 July 2019 12:02 AM GMT)

நெட்டப்பாக்கம் அருகே மனைவி தற்கொலை செய்த விரக்தியில் அதே சேலையில் தொழிலாளியும் தூக்கு போட்டு செத்தார். குடியை கெடுத்த குடிப்பழக்கத்தால் இவர்களது 8 மாத ஆண் குழந்தை தவித்து வருகிறது.

நெட்டப்பாக்கம்,

புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் கோடிசுவாமி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் சிலிண்டர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் விழுப்புரம் மாவட்டம் டி.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (24) என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இந்த தம்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சரவணன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வரத் தொடங்கினார். அதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் சரவணன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை கண்டித்த ராஜாமணிக்கும், சரவணனுக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சரவணன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

பின்னர் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது ராஜாமணி வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவது கண்ட சரவணன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சரவணன் தனது மைத்துனர் வீரமணியை போனில் தொடர்பு கொண்டு ராஜாமணி தற்கொலை செய்தது குறித்து தெரிவித்தார். மேலும் இனிமேல் நானும் வாழ விரும்பவில்லை. எனவே நானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு தனது மொபைல் போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி இதுபற்றி தனது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அதுபற்றி தகவல் தெரிவித்தார்.

இ்ந்த நிலையில் நள்ளிரவில் சரவணனின் 8 மாத குழந்தை அபினேஷ்வரின் அழுகை சத்தம் கேட்டு அவருடைய வீட்டின் அக்கம் பக்கத்து வீட்டார் வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது சரவணனும், அவருடைய மனைவியும் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சரவணனின் மைத்துனர் வீரமணியும மற்றும் உறவினர்களும் நெட்டப்பாக்கத்துக்கு விரைந்து வந்து கணவன், மனைவி இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து கணவன்-மனைவி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியை கெடுத்த குடியால் ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்து 8 மாத கைக்குழந்தை தவித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story