காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன விழா நெரிசலில் சிக்கி மூதாட்டி சாவு
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன விழா நெரிசலில் சிக்கி மயங்கிய மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம்,
புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். அவ்வாறு தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும்போது பலர் மயக்கம் அடைகின்றனர்.
இநத நிலையில் அத்திவரதரை தரிசிப்பதற்காக காத்திருந்த சின்ன காஞ்சீபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பூங்காவனம்மாள் (வயது 83) நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
26-வது நாளான நேற்று அத்திவரதர் முத்து கிரீடம், ஏலக்காய் மாலை, வெட்டிவேர் மாலை, அத்திபழம் மாலை, ரோஜா நிற பட்டாடையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி கிருத்திகையான நேற்று அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று அத்திவரதரை மின்துறை அமைச்சர் தங்கமணி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர் மாலை அணிவித்து, துளசி, பிரசாதங்களை வழங்கினர். நேற்றும் நெரிசலில் சிக்கி சிலர் மயக்கம் அடைந்தனர்.
Related Tags :
Next Story