திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா


திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
x
தினத்தந்தி 27 July 2019 3:30 AM IST (Updated: 27 July 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து முருப்பெருமானை வழிபட்டனர். மூவலர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தங்ககவசம் மற்றும் பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு சொந்தமான சரவணபொய்கை குளத்தில் தெப்பத்திருவிழா நடந்தது. தெப்பத்திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.

விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மாவட்ட அரசு அலுவலர்களும் கோவில் சார்பில் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணைஆணையர் ஞானசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், மேலாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும், அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. திருப்போரூர் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story