திருச்சியில் கண்களில் கருப்புத்துணி கட்டி, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா


திருச்சியில் கண்களில் கருப்புத்துணி கட்டி, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 27 July 2019 11:00 PM GMT (Updated: 27 July 2019 7:41 PM GMT)

திருச்சியில் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி,

மருத்துவ கல்வியில் ‘நெக்ஸ்ட்’ தேர்வை புகுத்தக்கூடாது. மருத்துவ கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். இந்திய மருத்துவ கழகத்தை ஒழிக்க முயற்சிக்க கூடாது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

3-வது நாள் தொடர்ச்சியாக நேற்று மாலை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் கண்களில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்க திருச்சி செயலாளர் கணபதி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 3-ம் ஆண்டு மாணவர்கள் முத்துப்பாண்டி, ராகவேந்திரா, யோகப்பிரியா, புகழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ணாவில் திரளான மருத்துவ மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

விழிகள் விலைபோகாமல் இருக்க...

தர்ணாவின்போது மாணவ-மாணவிகள், அதிகார ஆட்டத்தால் மருத்துவத்தின் பார்வை பறிக்கப்பட்டு நாம் இருட்டுக்குள் தள்ளப்படுகிறோம். கருப்பு அலங்கோலமன்று. அதிகார வர்க்கத்தை தட்டிக்கேட்கும் ஒன்று. விழிகள் மூடப்படுவது இருளில் வாழ பழகிக் கொள்வதற்காக அன்று.. நம் விழிகள் விலைபோகாமல் இருப்பதற்கே.

விழித்திடு தோழா..! கொடுத்திடு உனது குரலை.. அறையட்டும் அவர்கள் செவியில் உந்தன் குரல். அதுவரை கொடுத்திடு தோழா உன் குரலை. இது கண்மூடித்தனமான போராட்டம் அன்று. அதிகார திணிப்பை கண்டிக்கும் போராட்டம் என உரக்க குரல் கொடுத்து கோஷம் எழுப்பினர்.


Next Story