மதுரவாயல் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம்-நகை கொள்ளை


மதுரவாயல் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம்-நகை கொள்ளை
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 2019-07-30T23:44:37+05:30)

மதுரவாயல் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி.

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், ஆண்டாள் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 40). செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர், உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தார்.

இதில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.30 லட்சம் பணம், 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய தொகையை இவர் வீட்டில் எப்படி வைத்திருந்தார் அல்லது உண்மையாகவே அவ்வளவு தொகை கொள்ளை போனதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார். சத்யநாராயணன் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story