மாவட்ட செய்திகள்

பொருட்கள் வாங்கி கொண்டு 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண் கைது + "||" + Woman arrested for trying to sell 500 rupees counterfeit note

பொருட்கள் வாங்கி கொண்டு 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண் கைது

பொருட்கள் வாங்கி கொண்டு 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண் கைது
மயிலாடுதுறையில் பொருட்களை வாங்கி கொண்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மாற்ற முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அங்கு கண்ணன் என்பவர் வைத்திருக்கும் கடைக்கு நேற்று ஒரு பெண் வந்தார். அந்த கடையில் பொருட்களை வாங்கி கொண்டு, அதற்கு ரூ.500-ஐ கடை உரிமையாளரிடம் கொடுத்தார். அதனை வாங்கிய கடை உரிமையாளருக்கு 500 ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நன்றாக பார்தார். அது கள்ள நோட்டு என உறுதியானது. உடனே அந்த பெண் கடையில் இருந்து நைசாக தப்பி சென்றார். இதனை கண்ட கடை ஊழியர்கள், அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், தன்னை விட்டுவிடும்படி கதறி அழுதார். ஆனால், கடை உரிமையாளர் அந்த பெண்ணை பிடித்து வைத்துக் கொண்டு மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனிடையே அந்த பெண், தனது மணிபர்சில் வைத்து இருந்த மேலும் இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எடுத்து கிழித்து கசக்கி கடைக்கு வெளியே வீசினார். இதனை அறிந்த பக்கத்து கடைக்காரர்கள், கண்ணனின் கடை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கைது

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண், மயிலாடுதுறை ஆடியபிள்ளையார் கோவில் அருகே ஜெயலலிதா நகரை சேர்ந்த வெங்கடேசன் மனைவி கற்பகம் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் கற்பகம் அதே கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொருட்களை வாங்கி கொண்டு கள்ள நோட்டை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த பெண் கடையில் கொடுத்த கள்ள நோட்டையும், கிழித்து எறிந்த கள்ள நோட்டுகளையும் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பகத்தை கைது செய்தனர்.

மேலும், கற்பகத்திற்கு கள்ள நோட்டுகளை வினியோகம் செய்தது யார்? அவரின் பின்னணியில் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் கும்பல் உள்ளதா? கள்ள நோட்டுகளை மாற்றும் முயற்சி எப்போதில் இருந்து நடைபெறுகிறது? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை