திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 11:00 PM GMT (Updated: 1 Aug 2019 8:00 PM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது காவிரி ஆறு. குடிநீருக்கு மட்டுமின்றி விவசாய பணிகளுக்கும் காவிரி தண்ணீரை நம்பித்தான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற பெயரில் காவிரி ஆற்றில் இருந்து பல மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இதனால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இந்தநிலையில் பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி பிள்ளையார் கோவில் அக்ரஹாரம் பஸ் நிலையம் எதிரே உள்ள காவிரி ஆற்றில் நேற்று காலை தண்ணீர் எடுப்பதற்காக மண் பரிசோதனை செய்ய ஒப்பந்ததாரர் தளவாட பொருட்களுடன் வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, இந்த பகுதியில் தண்ணீர் எடுக்க மண் பரிசோதனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சிறுகமணி பேரூராட்சி செயல் அதிகாரி உமாராணியிடம் சென்று, தண்ணீர் எடுப்பது குறித்து பொது மக்களிடம் கருத்து எதுவும் கேட்கப்படவில்லை. எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று மண் பரிசோதனை செய்ய ஆட்கள் வந்துள்ளனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

ஏற்கனவே, மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் இல்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. மேலும் தண்ணீரை உறிஞ்சினால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு போய் விடும். ஆகவே, இந்த பகுதியில் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு அதிகாரி உமாராணி, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், காவிரி ஆற்றில் மாவட்ட எல்லைக்குள் ஏற்கனவே கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆழ்குழாய் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் மீண்டும் தண்ணீர் எடுத்தால் திருச்சி மக்களுக்கு தண்ணீரே கிடைக்காமல் போய்விடும்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல மண் பரிசோதனை செய்ய வந்ததாகவும், இது மத்திய அரசு திட்டம் என்றும் ஒப்பந்ததாரர் தெரிவித்தார். காவிரி ஆற்றில் எந்த இடத்திலும் இனி தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம், என்று தெரிவித்தனர்.


Next Story