தனியார் எஸ்டேட்டில் நீரோடையை மறித்து கட்டப்பட்டது, ஆர்.டி.ஓ. உத்தரவிட்டும் அகற்றப்படாத தடுப்பணை


தனியார் எஸ்டேட்டில் நீரோடையை மறித்து கட்டப்பட்டது, ஆர்.டி.ஓ. உத்தரவிட்டும் அகற்றப்படாத தடுப்பணை
x
தினத்தந்தி 2 Aug 2019 10:30 PM GMT (Updated: 2 Aug 2019 11:19 PM GMT)

மஞ்சூர் அருகே தனியார் எஸ்டேட்டில் நீரோடையை மறித்து கட்டப்பட்ட தடுப்பணை, ஆர்.டி.ஓ. உத்தரவிட்டும் இடித்து அகற்றப்படாமல் உள்ளது. இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இங்குள்ள சில எஸ்டேட்டுகளின் நிர்வாகத்தினர் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவது, பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி சாலை அமைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் மஞ்சூர் அருகே தேவர்சோலை பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்று உள்ளது. இதன் நடுவே நீரோடை செல்கிறது. இந்த நீரோடையை மறித்து 50 அடி உயரம் மற்றும் 100 அடி நீளம் கொண்ட தடுப்பணையை எஸ்டேட் நிர்வாகம் கட்டி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு ஊட்டி ஆர்.டி.ஓ. சுரே‌‌ஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தடுப்பணையை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். ஆனாலும் இதுவரை அந்த தடுப்பணை இடித்து அகற்றப்படவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அனுமதியின்றி நீரோடையை மறித்து எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை மீறி தடுப்பணை கட்டி வைத்துள்ளனர். இதன் மூலம் அந்த நீரோடையை கொண்டு பயன்பெறும் கீழ்கைக்காட்டி, பெகும்பள்ளம், முள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த தடுப்பணையை இடித்து அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். ஆனால் இதுவரை தடுப்பணை இடிக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகம் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story