வீட்டு வரி உயர்வை திரும்ப பெறவில்லையென்றால் நாளை மனித சங்கிலி போராட்டம்


வீட்டு வரி உயர்வை திரும்ப பெறவில்லையென்றால் நாளை மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 8:21 PM GMT)

வீட்டு வரி உயர்வை திரும்ப பெறவில்லையென்றால் நாளை மனித சங்கிலி போராட்டம் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.

பொன்மலைப்பட்டி,

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி லெனின், ம.தி.மு.க. அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி வீட்டு வரியை வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளது. 61 முதல் 65-வது வார்டு வரை புதிதாக சேர்க்கப்பட்ட மாநகராட்சி பகுதிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சியாக இருந்தபோது என்ன வசதிகள் இருந்ததோ அதுவே தற்போதும் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால், வரியை மட்டும் உயர்த்தி உள்ளனர். இதுசம்பந்தமாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரோடு இணைந்து போராட்டம் நடத்தும்படி தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீட்டு வரி உயர்வை திரும்ப பெறவில்லையென்றால் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை காட்டூர் ஆயில் மில்லில் இருந்து திருவெறும்பூர் வரை சுமார் 5 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story