மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 3:45 AM IST (Updated: 5 Aug 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி முத்தபுடையான்பட்டி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமம் அடைந்து வந்தனர். தினமும் தண்ணீருக்காக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டியில் காலிக் குடங்களுடன் கூடினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் வந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு, ஊராட்சி செயலாளர் போஸ் என்ற அழகுமலை மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாகவும், தற்காலிகமாக தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்.

இதனையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு சாலையோரமாக நின்றனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின் நீண்டதூரம் சாலையில் வரிசையாக நின்ற வாகனங்களை போலீசார் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் மேலும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Next Story