மாவட்டத்தில் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது


மாவட்டத்தில் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 Aug 2019 9:58 PM GMT (Updated: 5 Aug 2019 9:58 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் கிசான் கடன் அட்டைகள் பெற சிறப்பு முகாம் நாளை(புதன்கிழமை) தொடங்குவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் போது பணம் எடுத்து கொள்ள வசதியாக, உரிய காலத்தில் கடனை செலுத்தினால் வட்டி குறைப்பால் 4 சத வட்டியில் கடன் வசதி வழங்கும் கிசான் கடன் அட்டைகள் திட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.

தற்போது ரிசர்வ் வங்கியால் உயர்த்தப்பட்ட கடன் வரம்பின் படி ஒரு விவசாயி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பிணையமின்றி கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பரிசீலனை கட்டணம், ஆய்வு கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

வேளாண்மை, தோட்டக்கலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த கடன் வசதி தற்போது மீன்பிடி தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் மேற்கொள்பவர்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே வேளாண்மைக்காக கிசான் கடன் அட்டை வைத்திருப்பவர்கள், கால்நடை பராமரிப்புக்காகவும் கடன் பெற விரும்பினால் இதே சலுகைகளுடன் ரூ.3 லட்சம் வரை கடன்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 813 கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் வங்கிக்கடன் வசதி பெறாத தகுதியான விவசாயிகள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கி அவர்களை வங்கி கடன் வசதி வளையத்துக்குள் கொண்டு வந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று அவர்கள் வேளாண்மையை வெற்றிகரமாக மேற்கொண்டு கூடுதல் லாபம் பெறவும், புதிதாக இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ள கால்நடை வளர்போர் மற்றும் மீன்பிடி தொழில் மேற்கொள்பவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கி ஊக்குவிக்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி நாளை(புதன்கிழமை) காணம் கிராமத்தில் தொடங்குகிறது. நாளைமறுநாள் (வியாழக்கிழமை) லட்சுமிபுரத்திலும், 9-ந்தேதி உடன்குடி, பூவாணி, குமரெட்டியாபுரம், கொங்கராயகுறிச்சி கிராமங்களிலும், 16-ந்தேதி சாத்தான்குளத்திலும், 17-ந்தேதி வானவன்விளை, ஆறாம்பண்ணையிலும், 20-ந்தேதி உடன்குடி, ஏரல், ஸ்ரீவைகுண்டம் கிராமங்களிலும், 21-ந்தேதி முத்தலாங்குறிச்சி, 22-ந்தேதி குரும்பூர், நாலாங்குடி, கூர்ந்தவிளை, டி.சரவணாபுரம், 26-ந்தேதி புதியம்புத்தூர், மெஞ்ஞானபுரம், புதூர், காயாமொழி, பண்டாரவிளையிலும், 27-ந்தேதி ஆத்தூர், சிவத்தையாபுரம், குலையன்கரிசல் கிராமத்திலும், 30-ந்தேதி ஆழ்வார்தோப்பு, நாசரேத்திலும் நடக்க உள்ளது.

இதுவரை கடன் வசதி பெறாத தகுதியுள்ள விவசாயிகள், கால்நடை வளர்போர், மீன்பிடி தொழில் செய்பவர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் வசதி பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story