முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு, கார்த்திகேயனிடம் 5 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி


முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு, கார்த்திகேயனிடம் 5 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 10:47 PM GMT)

முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலையில் கைதான கார்த்திகேயனிடம் 5 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நெல்லை கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

நெல்லை,

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ள வீட்டில் நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ந் தேதி கொலை செய்யப்பட்டனர். உமாமகேசுவரி அணிந்திருந்த 21 பவுன் நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொலைகள் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் மகன் பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனை (வயது வயது 33) போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, 3 பேர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. அதன்படி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் சிறையில் இருக்கும் கார்த்திகேயனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து, நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி பாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருந்த கார்த்திகேயனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டிற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். விசாரணை தொடங்கியதும் நீதிபதி பாபு, கார்த்திகேயனிடம் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி விட்டனர்.

எனவே, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேலும் விவரங்கள் சேகரிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் கார்த்திகேயனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாபு, கார்த்திகேயனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்தார். மேலும், அவரை வருகிற 12-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கார்த்திகேயனை வேன் மூலம் நேற்று மாலை 4.30 மணி அளவில் கோர்ட்டில் இருந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மாலை 6 மணி வரை அதாவது சுமார் 1½ மணி நேரம் அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின்னர் அவரை போலீசார் பாளையங்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கார்த்திகேயனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் கார்த்திகேயனின் தாயும், தி.மு.க. பெண் பிரமுகருமான சீனியம்மாள் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story