நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை: சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை


நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை: சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை
x
தினத்தந்தி 9 Aug 2019 10:15 PM GMT (Updated: 9 Aug 2019 7:42 PM GMT)

நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் உமா மகேசுவரி, நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேரும் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது, பாளையங்கோட்டை சாந்திநகர் 20-வது தெருவை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் தேர்தலில் போட்டியிட கட்சியில் சீட் வாங்கி தருவதற்காக உமா மகேசுவரியிடம் பணம் கொடுத்திருந்ததும், ஆனால் குறிப்பிட்டபடி சீட் வாங்கி தராததால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன், உமா மகேசுவரி உள்பட 3 பேரை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திடீரென்று சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நெல்லைக்கு வந்து விசாரணை நடத்தினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனை, போலீஸ் காவலில் எடுத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள், நெல்லை மாநகர போலீசார் ஏற்கனவே ஆவணப்படுத்தி இருக்கும் ஆதாரங்களை கொண்டு கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினர்.

நேற்று அந்த ஆதாரங்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் வசம் இருந்த செல்போன் இணைப்புகள் மற்றும் இணையதள சேவை இணைப்புகள் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்தனர். கடந்த ஓராண்டாக அவர் இணையதளம், செல்போன் மூலம் மேற்கொண்ட செயல்பாடுகளை ஆராய்ந்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர் தலைமையில், துணை சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், உலகராணி உள்ளிட்டோர் நேற்று மீண்டும் களஆய்வு பணியில் ஈடுபட்டனர். அதாவது கார்த்திகேயனிடம் விசாரணையின்போது கிடைத்த தகவல்களை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

கார்த்திகேயன் கார் நிறுத்தி இருந்த இடம், அவர் அங்கிருந்து உமா மகேசுவரி வீட்டுக்கு நடந்து சென்ற விதம், அங்குள்ள புரோட்டா கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆகியவை குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும் உமா மகேசுவரி வீட்டுக்கு சென்றும் விசாரணை நடத்தினர்.

கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் விசாரணை அனுமதி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து கார்த்திகேயனிடம் இன்றும், நாளையும் விசாரணை நடத்தி, தேவையான வாக்குமூலங்களை பெறுகின்றனர். பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story