கரிக்கட்டை, இலைகளால் நாடோடி ஓவியர் வரைந்த தத்ரூப இயற்கை காட்சி அசாத்திய திறமையை கண்டு மக்கள் வியப்பு


கரிக்கட்டை, இலைகளால் நாடோடி ஓவியர் வரைந்த தத்ரூப இயற்கை காட்சி அசாத்திய திறமையை கண்டு மக்கள் வியப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 8:28 PM GMT)

கரூரில் கரிக்கட்டை, இலைகளால் நாடோடி ஓவியர் வரைந்த தத்ரூப இயற்கை காட்சியை கண்டு ஆச்சரியமடைந்த பொதுமக்கள் அவரது அசாத்திய திறமைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கரூர்,

அந்தி மாலைப் பொழுதில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கரூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள பகுதி பரபரப்பாக காணப்பட்டது. டெக்ஸ் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் வாரச்சம்பளம் பெற்றுக்கொண்டு வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பொதுமக்கள் தேனீர் கடைகளுக்கு சென்று இளைப்பாறி சென்றனர். இந்த நிலையில் அழுக்கான ஆடைகளுடன், முகச்சவரம் கூட செய்தாத 50 வயதை கடந்த ஒருவர் 2 அழுக்குப்பையுடன் பசுபதிபுரம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு கிடந்த கரிக் கட்டை, செங்கல், இலை போன்றவற்றை எடுத்துக்கொண்டு அங்குள்ள நகராட்சி தண்ணீர் தொட்டியின் சுற்றுச் சுவரில் ஏதோ வரைய தொடங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் சென்றனர். பின்னர் மெல்ல மெல்ல அவரது கிறுக்கல்கள் ஓவியமாக உருமாறி கொண்டிருந்தது.

தத்ரூப இயற்கை காட்சி

அரை மணிநேரம் கழித்து அவர் வரைந்த ஓவியத்தை பார்த்தவர்கள் மெய்சிலிர்த்து போய்விட்டனர். வண்ண பென்சில்களை கையில் கொடுத்து தாளில் படம் வரைய சொன்னாலே பெரும்பாலானோருக்கு ஓவியம் சரிவர வராது. அப்படி இருக்கையில் இயற்கை காட்சிகளை தத்ரூபமாக அவர் ஓவியமாக வரைந்திருந்தார். சாலை, அதன் நடுவில் வெள்ளை கோடு, ஓரத்தில் மண், தடுப்பு வேலி, மரங்கள், ஏரி, ஏரிக்கரையில் பங்களா, பாதசாரி, மரம் ஏறும் தொழிலாளி இயற்கையோடு இணைந்த மனிதனின் வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக இருந்தது. இத்தனைக்கும் இந்த ஓவியத்தை வரைவதற்கு ஒரு மணிநேரம் மட்டுமே எடுத்துக்கொண்டார்.

மக்கள் பாராட்டு

இதைக்கண்டு அங்கு கூடியிருந்த மக்கள், வியப்பில் ஆழ்ந்து அந்த ஓவியரை பாராட்டினர். பின்னர் அவரிடம் ஐயா... நீங்கள் யார்? என வினா எழுப்பினர். சதானந்தா என பெயரை உச்சரித்த அவர் உலகில் இருக்கும் எதை வரைய வேண்டுமோ அதனை என்னால் ஓவியமாக வரைய முடியும் என்றார். மேற்கொண்டு எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை. இதையடுத்து மக்கள் கொடுத்த அன்பளிப்பு தொகையில் ஒரு டீ வாங்கி குடித்து விட்டு அங்கிருந்து நடையை கட்டினார்.

Next Story