மாவட்ட செய்திகள்

உயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை 2 பேர் கைது + "||" + Two arrested for torturing a boy in a garment shop

உயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை 2 பேர் கைது

உயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை 2 பேர் கைது
நாகையில் உயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பூட்டப்பட்டிருந்த துணிக்கடையின் உள்ளே இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கேட்டு வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 15 வயதான சிறுவன் இருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சிறுவனை கடையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.


அப்போது அந்த சிறுவனின் வாயில் பெவிக்கால் பசை போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் அவன் மயங்கி நிலையில் இருந்தான்.

இதையடுத்து போலீசார் சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவன் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதும், நாகை புதுத்தெருவை சேர்ந்த பரக்கத்துல்லா (வயது 26) மற்றும் இவரது நண்பர் நூல்கடை தெருவை சேர்ந்த தாரீக்ரியாஸ் (28) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது தன்னை அழைத்து வந்து கடையில் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக சிறுவன் போலீசாரிடம் கூறினான்.

இதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரக்கத்துல்லா, தாரீக்ரியாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரக்கத்துல்லா தனது வீட்டில் பறவைகள் வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக இவரது வீட்டில் வளர்த்து வரும் உயர்ரக கிளிகள் காணாமல் போனது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரக்கத்துல்லா, 3 சிறுவர்கள் கிளிகளை எடுத்து சென்றதை பார்த்துள்ளார். அவர்கள் தான் தனது கிளிகளை திருடி இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதை தொடர்ந்து அவர்கள் யார்? என்று விசாரணை நடத்திய போது அந்த சிறுவர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தனது நண்பர் தாரீக்ரியாஸ் உடன் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் சென்று சிறுவனை மட்டும் பிடித்து நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தாரீக்ரியாசுக்கு சொந்தமான துணிக்கடையில் அடைத்து வைத்து கிளிகள் குறித்து கேட்டு தாக்கி உள்ளது தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.