திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 12 Aug 2019 9:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:27 PM GMT)

திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, 

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகையை யொட்டி திருவண்ணாமலையில் 8 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு தொழுகை நடைபெறும் இடங்களுக்கு சென்றனர்.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் அருகே உள்ள ஈத்கா மைதானம், பாலாஜி நகர் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் இஸ்லாமியர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இறைச்சி (குர்பானி) வழங்கினர்.

மாவட்டம் முழுவதும் 87 இடங்களில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள பெரியபள்ளி வாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று நிர்மலா நகர் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இதேபோல போளூர் ஈத்கா மைதானத்திலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். 

Next Story