சிலை கடத்தல் வழக்கில், சென்னையில் கைதான பெண் தொழில் அதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு


சிலை கடத்தல் வழக்கில், சென்னையில் கைதான பெண் தொழில் அதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:15 PM GMT (Updated: 13 Aug 2019 5:13 PM GMT)

சிலை கடத்தல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட பெண் தொழிலதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

கும்பகோணம்,

புதுச்சேரி மாநிலம் கோலாக் நகரை சேர்ந்தவர் மரிய தெரசா ஆனந்தி வனினா(வயது 37). இவர் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். மேலும் அவர் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர்ஆவார். இந்த நிலையில் ஆனந்திக்கு பஞ்சலோக சிலைகளை கடத்தி விற்பதில் தொடர்பு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள வனினாவின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 11 புராதன பஞ்சலோக சிலைகளை கடத்தி விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வனினாவை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் வனினாவை தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வந்த வனினாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அதன் பின்னர் நேற்று காலை கும்பகோணத்தில் உள்ள நீதிபதி மாதவ ராமானுஜத்தின் வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

Next Story