குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு


குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:24 PM GMT)

குளித்தலை அருகே, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டன.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள இறும்பூதிபட்டி சந்தை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை அக்கடையின் வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதன் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் விரைந்து வந்ததுடன், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு குளித்தலை போலீசார் விரைந்து வந்து கடையின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், மேஜை டிராயரில் பணம் வைக்கப்பட்டுள்ளதா என்று தேடி உள்ளனர். அதில் பணம் இல்லாததால் அட்டைப்பெட்டிகளில் பணம் வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று அதனை கத்தியால் கிழித்து தேடி உள்ளனர். அதிலும் பணம் எதுவும் சிக்காததால் கோபத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளை கீழே தள்ளி சேதப்படுத்தி இருந்ததும், ஒரு பெட்டி நிறைய வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து சென்றதும் தெரிய வந்தது.

பணம் தப்பியது

பின்னர், ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, டாஸ்மாக் கடையில் தினமும் மது விற்பனை மூலம் வசூலாகும் பணத்தை அடுத்த நாள் வங்கியில் செலுத்துவது வழக்கம் என்பதும், ஆனால் கடந்த 3 நாட்களாக வங்கிகள் விடுமுறை என்பதால் பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்றதும் தெரிய வந்தது. வசூலான லட்சக்கணக்கான பணத்தை ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றதால் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story