முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடிய தம்பதிக்கு போலீஸ்சூப்பிரண்டு பாராட்டு - கொள்ளையர்களை விரட்டியடித்தது பற்றி தம்பதி பேட்டி


முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடிய தம்பதிக்கு போலீஸ்சூப்பிரண்டு பாராட்டு - கொள்ளையர்களை விரட்டியடித்தது பற்றி தம்பதி பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடிய தம்பதியை போலீஸ்சூப்பிரண்டு நேரில் பாராட்டினார். கொள்ளையர்களை விரட்டியடித்தது எப்படி? என்பது குறித்து வயதான தம்பதி பேட்டியளித்தனர்.

கடையம், 

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு அசோக், ஆனந்த் ஆகிய 2 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவும், ஆனந்த் பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்கள். ஜெயலட்சுமி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 11-ந்தேதி இரவு சண்முகவேல், அவருடைய மனைவி செந்தாமரை ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு 2 முகமூடி கொள்ளையர்கள் அரிவாளுடன் பாய்ந்து வந்தனர். அவர்கள் தம்பதியை வெட்ட முயன்றனர். ஆனால் அதை கண்டு சிறிதும் அஞ்சாத கணவன்-மனைவி இருவரும் மனஉறுதியுடன் தங்களது கையில் கிடைத்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது எறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் நிலை குலைந்து போன கொள்ளையர்கள் தங்களது கையில் கிடைத்த 4½ பவுன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளையர்களை வயதான தம்பதி துணிச்சலுடன் விரட்டியடித்த காட்சிகள் அவர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனால் இந்த வீரத்தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று காலை வந்தார். அவர் நடந்த சம்பவம் குறித்து சண்முகவேல், செந்தாமரை ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையர்களை விரட்டியதற்காக அவர்களை பாராட்டினார்.

அப்போது அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறுகையில், “கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் இணைப்பு பெற்றிருந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை கண்டுபிடித்து விடுவோம்” என்றார். கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் செல்போனில் சண்முகவேலுவை தொடர்பு கொண்டு, வீரத்தம்பதியின் நெஞ்சுரமிக்க செயலை பாராட்டினார்.

இந்த நிலையில் தங்களது வீட்டில் கைவரிசை காட்ட வந்த முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்தது எப்படி? என்பது குறித்து அந்த தம்பதியினர் விவரித்தனர். சண்முகவேல் கூறியதாவது:-

நான் வீட்டு வராண்டாவில் அமர்ந்து பெங்களூருவில் உள்ள மருமகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின்னால் வந்த கொள்ளையன் எனது கழுத்தை துண்டால் இறுக்கினான். அவனது பிடியில் இருந்து விடுபட நான் போராடினேன். அப்போது வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த எனது மனைவி செந்தாமரை அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையன் மீது எறிந்தார். இதனால் அவன் கவனம் எனது மனைவி பக்கம் திரும்பவே, நானும் சுதாரித்துக் கொண்டு அவனை தாக்க தொடங்கினேன்.

அதற்குள் மற்றொரு கொள்ளையனும் வந்து விட்டான். அவர்கள் இருவரும் எங்களை நோக்கி அரிவாளால் வெட்ட பாய்ந்து வந்தனர். ஆனால் நாங்கள் அதற்கு எல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அவர்களை சரமாரியாக தாக்கினோம். எங்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும், அல்லது அவர்களை தாக்கி காயம் ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தாக்கினேன். அப்படி செய்து விட்டால் கொள்ளையர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம் என்று கருதினேன்.

இவ்வாறு சண்முகவேல் கூறினார்.

சண்முகவேலின் மனைவி செந்தாமரை கூறும்போது, “எனது கணவரை கொள்ளையன் தாக்க முயன்றபோது சத்தம் கேட்டது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக கருதி, நான் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தேன். அங்கு எனது கணவர் கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க போராடியதை பார்த்ததும் எனக்கு முதலில் அவரை எப்படி விடுவிப்பது என்ற எண்ணம் தான் தோன்றியது. உடனே அருகில் கிடந்த பொருட்களை எல்லாம் எடுத்து அவனை தாக்கினேன். இதனால் அவன் நிலைகுலைந்து போனான். பின்னர் நானும், எனது கணவரும் சேர்ந்து கொள்ளையர்களை அடித்து விரட்டி விட்டோம்” என்று பெருமிதத்துடன் கூறினார். 

Next Story