பரோலில் வந்த நளினி, ஜெயிலில் கணவர் முருகனுடன் சந்திப்பு - மகள் திருமண ஏற்பாடு குறித்து பேசியதாக தகவல்


பரோலில் வந்த நளினி, ஜெயிலில் கணவர் முருகனுடன் சந்திப்பு - மகள் திருமண ஏற்பாடு குறித்து பேசியதாக தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2019 9:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

ஒரு மாதகால பரோலில் வந்துள்ள நளினி வேலூர் ஆண்கள் ஜெயிலில் கணவர் முருகனை சந்தித்து பேசினார். அப்போது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் பேசிக்கொண்டனர்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி அடைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஐகோர்ட்டு ஒரு மாதம் பரோல் நளினிக்கு வழங்கியது.

கடந்த மாதம் 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவையை சேர்ந்த சிங்கராயர் என்பவருடைய வீட்டில் தங்கி உள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் தினமும் ஒரு முறை நேரில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

நளினி ஜெயிலில் இருக்கும்போது கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது. பரோலில் வந்த பின்னர் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சிறைத்துறையின் அனுமதி கடிதம் இல்லாதது போன்ற காரணங்களால் நளினி-முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் நளினி சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பினார். அதில், எனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்து கணவர் முருகனுடன் பேச வேண்டியுள்ளது. எனவே அவரை ஜெயிலில் சந்தித்து பேச அனுமதி அளிக்கவும், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனு ஜெயில் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நளினி-முருகன் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதையடுத்து சத்துவாச்சாரி புலவர்நகரில் தங்கியிருந்த நளினியை வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு காலை 10.20 மணியளவில் அழைத்து வந்தனர். அங்கு 20-வது நாளாக நேற்று நளினி கையெழுத்திட்டார். பின்னர் அவர், பலத்த பாதுகாப்புடன் வேனில் கணவர் முருகன் அடைக்கப்பட்டிருந்த வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு ஒரு தனியறையில் முருகன்-நளினி சந்திப்பு நடந்தது. 11 மணி முதல் 12 மணி வரை நடந்த இந்த சந்திப்பின்போது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்தும், அவர் இந்தியாவிற்கு வருவது குறித்தும் பேசிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நளினி போலீஸ் பாதுகாப்புடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு மீண்டும் மதியம் 12.20 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.

Next Story