மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டுச்செல்லும் வெள்ளம்


மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டுச்செல்லும் வெள்ளம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 PM GMT (Updated: 14 Aug 2019 6:46 PM GMT)

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டு வெள்ளம் செல்கிறது.

ஈரோடு,

கர்நாடகா மாநிலத்தில் பெய்த பெரு மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி மேட்டூர் அணைக்கு வந்தன. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியது. அதைத்தொடர்ந்து டெல்டா பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு வந்தது. முதலில் 3 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் வெள்ளம் கரைகளை தொட்டு ஓடத்தொடங்கியது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைகளை மறைத்துக்கொண்டு நேற்று தண்ணீர் ஓடியது. 2 கரைகளையும் தொட்டு காவிரி செல்லும் அழகை பார்க்க பலரும் வந்து சென்றனர். கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் மழை இல்லாத போதும், கர்நாடகாவில் பெய்த மழையால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து 1 லட்சம் கன அடிக்கும் மேலாக சென்றது. கரைபுரண்டு ஓடிய இந்த வெள்ளம்போல, மீண்டும் இந்த ஆண்டும் காவிரியில் வெள்ளம் வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதற்கிடையே காவிரியில் தண்ணீர் அதிக அளவில் வருவதாலும், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக வெள்ளம் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாலும், பொதுமக்கள் யாரும் காவிரிக்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், காவிரிக்கரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்கள் உடமைகள், கால்நடைகளை கொண்டு செல்லவும் வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Next Story