சுதந்திர தின கொண்டாட்டம், பயனாளிகளுக்கு ரூ.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் வழங்கினார்


சுதந்திர தின கொண்டாட்டம், பயனாளிகளுக்கு ரூ.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 10:23 PM GMT)

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத் தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெள்ளை புறாக்களை, கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் பறக்கவிட்டனர்.

பின்னர் மூவர்ண பலூன் களும் பறக்கவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி.யின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், திண்டுக்கல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, பழனிச்சாமி, மகேஷ், பாஸ்டின் தினகரன் உள்பட போலீஸ் துறையை சேர்ந்த 25 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் உள்பட 109 பேருக்கும் பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வைத்துள்ள நபர்களுக் கும் பாராட்டு சான்று வழங் கப்பட்டது.

அதன்பின்னர் வருவாய்த்துறை சார்பில் 19 பேருக்கு வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு உபகரணங்கள், சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 10 பேருக்கு உதவித்தொகை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 2 பேருக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீட்டுக்கான ஆணை, தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பேருக்கு பசுமைக்குடில், சிப்பம் கட்டும் அறை, நிழல் வலைக்கூடம் அமைக்க மானியம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 3 பேருக்கு ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் டிராக்டர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.45½ லட்சம் மதிப்பில் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் என மொத்தம் 62 பேருக்கு ரூ.92 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தேசிய ஒருமைப்பாடு, மழைநீர் சேமிப்பு, பூமி பாதுகாப்பு, தமிழர் பண்பாடு, நாட்டுப்புற கலைகள் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் நடனம் ஆடி அசத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கமிஷனர் (பொறுப்பு) பாலசந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகர்நல அலுவலர் அனிதா, உதவி பொறியாளர்கள் மாரியப்பன், சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பொதுமேலாளர் ராஜேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் எரிபொருள் சிக்கனம் செய்து பஸ் ஓட்டிய 12 டிரைவர்கள், அதிக வருவாய் ஈட்டிய 12 கண்டக்டர்கள், சிறந்த பணியாளர்கள் என மொத்தம் 36 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் துணை மேலாளர்கள் ஆனந்தன், கணேசன் மற்றும் உதவி மேலாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story