கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொல்ல முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது


கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொல்ல முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
x
தினத்தந்தி 16 Aug 2019 6:07 AM IST (Updated: 16 Aug 2019 6:07 AM IST)
t-max-icont-min-icon

கணவரை கட்டிப்போட்டு உடலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, கொல்ல முயன்ற பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கில் உள்ள பிரதாப்காத் குடியிருப்பில் வசித்து வருபவர் பாவிசியா. இவரது மனைவி குயின்சியா(வயது28). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாவிசியாவின் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பாத்திரங்கள் வெளியே வந்து விழுந்தன. மேலும் வீட்டுக்குள் இருந்து பயங்கர அலறல் சத்தமும் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, பாவிசியாவின் வீடு போர்க்களம் போல காட்சி அளித்தது. பொருட்கள் அங்கும், இங்கும் சிதறி கிடந்தன. 2 குழந்தைகளும் கதறி அழுது கொண்டு இருந்தன. தலை, உடலில் காயங்களுடன் கண்ணில் மிளகாய் பொடியுடன் பாவிசியா கழிவறையில் வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். ஆனால் குயின்சியாவும், வாலிபர் ஒருவரும் சலனமின்றி வீட்டின் சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக பாவிசியாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குயின்சியா மற்றும் அவருடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கீழ்க்கண்ட பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

பாவிசியா முதலில் நைகாவ் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது பாவிசியாவின் மனைவி குயின்சியாவுக்கும், அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மெஹந்தி போடும் வாலிபரான சட்விர்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாவிசியா மனைவியுடன் வசாய்க்கு குடியேறி உள்ளார்.

இந்தநிலையில் சட்விரும் அதே கட்டிடத்தில் குடியேறினார். இதனால் பாவிசியா, குயின்சியா இடையே பிரச்சினை பூதாகரமானது. இதில், பாவிசியா தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர் மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இரவு அவர் தூங்கியவுடன் குயின்சியா கள்ளக்காதலன் சட்விருக்கு தகவல் கொடுத்து உள்ளார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் 2 பேரும் சேர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பாவிசியாவை உள்ளாடைகளுடன் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் கொதிக்கும் எண்ணெயை அவர் மீது ஊற்றினர். மேலும் மிளகாய் தூளை எடுத்து முகத்தில் போட்டனர். இதனால் வலி தாங்க முடியாமல் பாவிசியா அலறி உள்ளார். இதையடுத்து 2 பேரும் சுத்தியலால் பாவிசியாவின் தலையில் ஓங்கி அடித்தனர். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என நினைத்த அவர், வீட்டில் இருந்த பாத்திரங்களை எடுத்து ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.

இதையடுத்து குயின்சியா கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாவிசியாவை கழிவறையில் வைத்து பூட்டினார். எனினும் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலால் போலீசார் விரைந்து சென்று பாவிசியாவை மீட்டு உள்ளனர்.

இந்த தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொல்ல முயன்ற குயின்சியா மற்றும் அவரது கள்ளக்காதலன் சட்விரை கைது செய்தனர். தற்போது பாவிசியா உயிருக்கு ஆபத்தான நிலையில் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story