அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்


அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றுநீர் செல்லும் வாய்க்கால் களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் நீர்வழிப் பகுதிகளான திருமாநிலையூர் வாய்க்கால், பள்ளபாளையம் வாய்க்கால், சின்னதாராபுரம் வாய்க்கால், கோயம்பள்ளி சோமூர் வாய்க்கால், நஞ்சக்காளக்குறிச்சி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் நஞ்சக்காளக்குறிச்சி வாய்க்கால் மற்றும் கே.வி.பி நகர் அருகில் உள்ள ராஜவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பணிகள் துரிதம்

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அமராவதி, காவிரி மற்றும் அரியாறு ஆகிய மூன்று வடிநிலக்கோட்டங்களின் கீழ் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் இருக்கின்றது. இதில் அமராவதி வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட பள்ளபாளையம் வாய்க்கால் உள்ளிட்ட 6 வாய்க்கால்கள் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிக்காக மொத்தம் ரூ.1 கோடியே 74 லட்சத்தில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் அமராவதி நீர்ப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 13,000 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

அதேபோல, காவிரி வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட பாப்புலர் முதலியார் வாய்க்கால், கட்டளை வாய்க்கால், புதுகட்டளை வாய்க்கால், மகாதானபுரம் வாய்க்கால், படுகை மற்றும் சித்தலவாய் வாய்க்கால்களும், அரியூர் வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட கடவூர் வட்டத்தில் உள்ள தென்னிலை நீர்த்தேக்கம், மாவத்தூர் குளம், பன்னப்பட்டி குளம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் தாதம்பட்டி நீர்த்தேக்கம், பாப்பாக்காப்பட்டி குளம், குளித்தலை வட்டத்தில் மேலவெளியூர் நீர்த்தேக்கம், கழுகூர் குளம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களும் இந்த ஆண்டுக்கான குடிமராமத்துப் பணிகளில் தேர்வுசெய்யப்பட்டு ரூ.3 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீரை வீணாக்காமல்...

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்பாசனத்தால் சுமார் 44,690 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். பொதுமக்களும் இனிவரும் காலங்களில் மழைநீரை வீணாக்காமல் சேமித்து வைத்துப்பயன்படுத்த வேண்டும். தங்கள் வீடுகளில் கிணறுகள் இருந்தால் மழை நீரை சேமித்து கிணற்றுக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்்தை செறிவூட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தஆய்வின்போது, அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள், வட்டாட்சியர்கள் அமுதா(கரூர்), மகாமுனி (அரவக்குறிச்சி), விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story