தஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணி மும்முரம்


தஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:15 PM GMT (Updated: 18 Aug 2019 6:47 PM GMT)

தஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்குடிக்கு அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கார், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களும் தஞ்சை-மன்னார்குடி சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலை நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தாலும் இருவழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் திட்ட மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஏற்று தஞ்சை-மன்னார்குடிக்கு இடையே 28 கிலோமீட்டர் தூரத்திற்கு இருவழிச்சாலையாக மாற்ற ரூ.143 கோடியே 63 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை-மன்னார்குடி சாலையில் விளார், வாளமர்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், வாண்டையார் இருப்பு, ராகவாம்பாள்புரம், சடையார்கோவில், மூர்த்தியம்மாள்புரம், நெய்வாசல், வடுவூர், வடுவூர் தென்பாதி, செருமங்கலம், காரக்கோட்டை, குமரபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கிராமங்கள் இல்லாத பகுதிகளில் இருவழிச்சாலை 23 மீட்டர் அகலத்திலும், கிராமங்களில் 16 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக நிலத்தை அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குமரபுரத்தில் இருந்து வருவாய்த்துறையினர் பணியை தொடங்கினர். சாலையின் மையப்பகுதியில் இருந்து இடதுபுறம் 11½ மீட்டரும், வலதுபுறம் 11½ மீட்டரும் அளவீடு செய்யப்பட்டு, வருவாய்த்துறையினர் குறியீடு செய்து வருகின்றனர். இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

இது குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, இருவழிச்சாலையின் அகலம் 23 மீட்டர் ஆகும். கிராமப்பகுதியில் 16 மீட்டராக அகலம் குறைந்து விடும். இந்த பணியை விளார் கிராமம் வரை மேற்கொள்ள இருக்கிறோம். எங்கள் பணி முடிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறையினர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள் என்றனர்.

இருவழிச்சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்படும். சாலையோரம் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. பணி முடிந்தவுடன் 7 ஆண்டுகள் சாலை பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்வார்கள். மேலும் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை, தமிழக அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சை-மன்னார்குடி சாலையில் பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குளுமையான காற்று வீசும். எந்த சாலையிலும் இல்லாத அளவுக்கு தஞ்சை-மன்னார்குடி சாலையோரம் ஏராளமான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. சில இடங்களில் வெயிலே தெரியாத அளவுக்கு அடர்த்தியாக வளர்ந்து இருக்கும். இந்த மரங்கள் எல்லாம் இருவழிச்சாலை அமைக்கப்படும்போது வெட்டப்பட உள்ளன. இதனால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மரங்களை வெட்டினாலும் புதிய சாலை அமைக்கப்பட்ட பின்னர் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இருவழிச்சாலையால் விளை நிலங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விளை நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


Next Story