கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது பரிதாபம்


கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 6:58 PM GMT)

கும்பகோணம் அருகே திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கபிஸ்தலம்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் ஹரிஹரன்(வயது27). தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் மதகடி தெருவை சேர்ந்த அப்துல் மகன் முகமது(27), சாக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் மகன் சிவா(26), கும்பகோணம் ஆழ்வார் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் மகன் விஜய்(29). கும்பகோணம் மேட்டு தெருவை சேர்ந்த தமிழ்வாணன் மகன் சந்தோஷ்குமார். இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர்.

சந்தோஷ்குமாரின் சித்தப்பா இல்ல திருமண விழாவுக்காக ஹரிஹரன், முகமது, சிவா, விஜய் ஆகிய 4 பேரும் கும்பகோணம் அருகே சுவாமிமலை திருமஞ்சன வீதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ள பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

விளம்பர பேனரை தூக்கி கட்டும்போது அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரின் மின் கம்பி மீது எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் ஹரிஹரன், முகமது ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சிவா, விஜய் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று ஹரிஹரன், முகமது ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பரின் உறவினர் இல்ல திருமண விழாவுக்காக பேனர் கட்டிய 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story