எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்கள் கைது


எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்கள் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 2:50 PM GMT)

எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்,

கோபி கோவை பிரிவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 39). அதே பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது கடைக்கு 5 பெண்கள் வந்தனர். பார்ப்பதற்கு அப்பாவி போல் தெரிந்த அவர்கள், எங்களுக்கு பல்பு வேண்டும். அதற்கு முன்னதாக குடிக்க தண்ணீர் தாருங்கள் என்று கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த செல்வராஜ் பல்பு எடுப்பதற்காக கடைக்குள்ளே சென்றார். சில நிமிடத்தில் பல்பை எடுத்துக்கொண்டு முன்பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த 5 பெண்களையும் காணவில்லை.

மேலும் மேஜை டிராயர் திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் கடைக்கு வந்த 5 பெண்கள்தான் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதை தெரிந்துகொண்டு அக்கம் பக்கத்தில் அவர்களை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே இதுபற்றி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பெண்களையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை போலீசார் கோபி கடைவீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 5 பெண்கள் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் சேலத்தை சேர்ந்த சாந்தா (50), கவுரி (25), ரம்யா (25), செல்வி (34), லட்சுமி (27) ஆகியோர் என்பதும், அவர்கள்தான் செல்வராஜின் கடையில் ரூ.5 ஆயிரம் திருடினார்கள் என்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பணத்தையும் மீட்டார்கள்.

Next Story