சுயேச்சை உள்பட 17 பேர்களுக்கு மந்திரி பதவி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்
எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு செயல்பட்டு வந்தது.
முதல்-மந்திரியாக எடியூரப்பா...
கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதனை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம்(ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காஷ்மீர் மசோதாவை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கொண்டு வந்தது, கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது போன்ற காரணங்களால் மந்திரிசபையை விரிவாக்கம் ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து, எடியூரப்பா கடந்த வாரம் டெல்லிக்கு சென்றார்.
மந்திரிசபை விரிவாக்கம்
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் பெற்றார். 20-ந் தேதி(அதாவது நேற்று) மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். ஆனால் மந்திரிகள் தேர்வு குறித்த தகவலை பா.ஜனதா மேலிடம் ரகசியமாக வைத்திருந்தது.
யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்த பெயர் பட்டியலை அமித்ஷாவிடம் வழங்கிவிட்டு எடியூரப்பா பெங்களூரு திரும்பினார். மந்திரிகள் தேர்வு குறித்து முழுமையான தகவல் எடியூரப்பாவுக்கே தெரியாத நிலை கடைசி வரை நீடித்தது. நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புதிய மந்திரிகளின் பெயர் பட்டியலை பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தது.
17 மந்திரிகள்
அந்த பெயர் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. திட்டமிட்டபடி கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா காலை 10.30 மணிக்கு பெங்களூரு கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்றது. இதில் 17 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.
அதாவது பா.ஜனதாவை சேர்ந்த கோவிந்த் கார்ஜோள்(முதோள் தொகுதி), டாக்டர் அஸ்வத் நாராயண்(மல்லேசுவரம்), லட்சுமண் சவதி (கட்சி நிர்வாகி), ஈசுவரப்பா (சிவமொக்கா), அசோக் (பத்மநாபநகர்), ஜெகதீஷ் ஷெட்டர் (உப்பள்ளி-தார்வார் சென்டிரல்), ஸ்ரீராமுலு (முலகால்மூரு), சுரேஷ்குமார் (ராஜாஜிநகர்), வி.சோமண்ணா (கோவிந்தராஜ்நகர்), சி.டி.ரவி (சிக்கமகளூரு), பசவராஜ் பொம்மை (சிக்காவி), கோடாசீனிவாசபூஜாரி (மேல்-சபை உறுப்பினர்), மாதுசாமி (சிக்கநாயக்கனஹள்ளி), சி.சி.பட்டீல் (நரகுந்து), எச்.நாகேஷ் (முல்பாகல்), பிரபுசவான் (அவுராத்), சசிகலா ஜோலே(நிப்பானி) ஆகிய 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். கவர்னருடன் முதல்-மந்திரி எடியூரப்பா விழா மேடையில் அமர்ந்திருந்தார்.
கவர்னர் வாழ்த்து
கவர்னர் வஜூபாய் வாலா, புதிய மந்திரிகளுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடவுளின் பெயரில் 17 பேரும் பதவி ஏற்றனர். மந்திரி பிரபுசவான், லம்பானி சமூக கலாசார உடையை அணிந்து வந்து, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். புதிய மந்திரிகள் அனைவருக்கும் கவர்னர் வஜூபாய் வாலாவும், முதல்-மந்திரி எடியூரப்பாவும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பசவராஜ் பொம்மை, அஸ்வத் நாராயண், ஈசுவரப்பா, பிரபுசவான், எச்.நாகேஷ் உள்ளிட்டோர் எடியூரப்பாவின் காலில் விழுந்து வணங்கினர்.
பொதுவாக அதிக எண்ணிக்கையில் மந்திரிகள் பதவி ஏற்கும்போது, 4, 5 பேர் குழுவாக பதவி ஏற்பார்கள். ஆனால் நேற்று ஒவ்வொருவராக பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்க. சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு விழா, 11.20 மணி வரை 50 நிமிடங்கள் நடந்தது.
ஜெகதீஷ் ஷெட்டர்
இந்த விழாவில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், புதிய மந்திரிகளின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீராமுலு, ஈசுவரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பதவி ஏற்றபோது, ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் குரல் எழுப்பினர்.
இதில் எச்.நாகேஷ், முல்பாகல் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு சுயேச்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். குமாரசாமி ஆட்சியில் ஒரு மாதத்திற்கும் குறைவாக மந்திரியாக பதவி ஏற்று பணியாற்றியவர். மந்திரிகளாக பதவி ஏற்றவர்களில் ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த 2012-13-ம் ஆண்டு சுமார் 11 மாத காலம் முதல்-மந்திரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக முதல்-மந்திரியாக பணியாற்றிவிட்டு தற்போது மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டர் பதவி ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக மந்திரிகளாக...
17 மந்திரிகளில் சசிகலா ஜோலே, பிரபுசவான், டாக்டர் அஸ்வத் நாராயண், கோடா சீனிவாசபூஜாரி, மாதுசாமி ஆகிய 5 பேர் முதல் முறையாக மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். மற்ற 12 பேர் ஏற்கனவே மந்திரிகளாக பணியாற்றியவர்கள். ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோர் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் (2008-13) துணை முதல்-மந்திரிகளாக சிறிது காலம் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராஜ்பவன் ரோட்டில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. அனுமதி சீட்டு இருந்தவர்கள் மட்டுமே கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
எடியூரப்பாவுக்கு நெருக்கடி
இதற்கிடையே பதவி கிடைக்காத மூத்த எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, பாலச்சந்திர ஜார்கிகோளி, விருபாக்ஷப்பா, உமேஷ்கட்டி, கூளிகட்டி சேகர் மற்றும் திப்பாரெட்டி ஆகியோர் அதிருப்தியை வெளியிட்டு இருப்பதும் சிலர் தனியாக கூடி ஆலோசனை நடத்தி இருப்பதும் எடியூரப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story